வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கில் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மில்லிமீற்றர் இருக்கும் நிலையில் மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடஞ்சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 280 மில்லிமீற்றர் மழை கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக்கு கிழக்காக அடுத்த 36 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எதிர்வரும் 23ம் திகதி மாலையளவில் ஒரு சிறிய புயலாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும், அதிகளவான இடி மின்னலுடன் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அவதானமாக இருப்பது அவசியம். அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட கூடுதலான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.
அத்துடன் பல நாட் கலங்களுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கு சென்றவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது.
வடக்கு மாகாணத்தின் கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மி.மீ. ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும். ஆனால் இவ்வாண்டு, மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடஞ்சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 280மி.மீ. மழை கிடைத்துள்ளது.
இம்மாத இறுதியில் இதன் அளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தின் இதுவரையான 20 நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.
ஒப்பீட்டளவில் முல்லைத்தீவில் உள்ள கிழக்குப் பகுதிகள், யாழ்.வலிகாமம் பகுதிகள் அதிக அளவிலான மழைவீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.