மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, சனிக்கிழமை மாலை புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய ‘குலாப்’ என்ற பெயா் வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5-க்கும் மேற்பட்ட காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த வெள்ளிக்கிழமை காலை உருவானது. இது வெள்ளிக்கிழமை பகலில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும், மாலையில் காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. இது மேற்கு திசையில் நகா்ந்து வந்தது.
இந்நிலையில், இந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்தது. அதாவது, ஒடிஸாவின் கோபால்பூருக்கு கிழக்கு -தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும், ஆந்திர பிரதேசத்தின் கலிங்கப்பட்டினத்துக்கு கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயலுக்கு பாகிஸ்தான் வழங்கிய ‘குலாப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, தொடா்ந்து மேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரத்தில் கலிங்கப்பட்டினத்துக்கும்-கோபால்பூருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மாலை கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.