ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், துருக்கியில் இடம்பெற்ற மாநாட்டின் போது, உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷ்ய பிரதிநிதியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த காணொளியொன்று தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு நாடாளுமன்ற சபையின் 61 வது பொதுச் சபையின் மாநாடு நேற்று (04) துருக்கியில் நடைபெற்றது.
பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூகம் என இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க அம் மாநாடு கூடியது. மாநாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தனது நாட்டின் கொடியை பறித்த ரஷ்ய அரசியல்வாதியை உக்ரைன் எம்பி அடித்த காணொளி வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிவ் போஸ்டின் சிறப்பு நிருபரும் அரசியல் ஆலோசகருமான ஜேசன் ஜே ஸ்மார்ட் இந்த காணொளியை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சட்டத்தரணி இப்ராஹிம் சைடன் என்பவர் தனது டுவிட்டரில் “அவர் உண்மையிலேயே அந்த அடிக்கு தகுதியானவர். அங்காராவில் நடந்த கருங்கடல் பொருளாதார சமூக நிகழ்வில் ரஷ்யா பிரதிநிதி சண்டையிட்டு, எம்பி மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து உக்ரைன் கொடியை வலுக்கட்டாயமாக பறித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை குறித்த காணொளி வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.