அதாள பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக உள்ளது. அதிலும் சாதகமான நிலையை ரணில் எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனுதவியாக வழங்க பல நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இதில் ஜப்பானும் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஜப்பான் அரசாங்கம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்றுமதி நிதியளிப்பு நிறுவனமான இந்தியா எக்சிம் வங்கி, நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
நாடு அதன் மோசமான வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு உடனடி கடன் மறுசீரமைப்பு அவசியமாக உள்ளதென எக்ஸிம் வங்கியின் நிர்வாக அதிகாரி ஹர்ஷா பங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அடுத்த வாரமளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரணில் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் நெருக்கிய உறவுகளை கொண்ட ரணிலுக்கு பெரும் தொகைநிதியை பெறுவது மிகவும் இலகுவான விடயம் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேவேளை ஐரோப்பிய நாடுகளுடனும் சுமூக உறவினை ரணில் தற்போதும் முன்னெடுத்து வருகிறார். அடுத்து வரும் நாட்களில் நோர்வே உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் பெருமளவு நிதியுதவியை இலங்கைக்கு வழங்க முன்வரவுள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியா, மற்றும் சீனாவுடனான தமது ராஜதந்திர நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டனர். இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.
எனினும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அரசியல் ஞானி என வர்ணிக்கப்படும் ரணில், புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளமை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் இல்லாது செய்யக்கூடிய சாதக நிலையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
தற்போது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் கலாச்சாரம் விரைவில் இல்லாமல் போகும் என்ற நம்பிக்கை இலங்கை மக்கள் மத்தியில் தற்போது மலர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.