யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையை காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட மருத்துவ நிபுணராக கடமை ஆற்றியவர் என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே சாவகச்சேரி வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை வகை b என அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. வகை பி அடிப்படை வசதிகள் இணைக்கப்பட்ட அட்டவணையில் காணப்படுகின்றன.
இதில் குறிப்பிட்டுள்ள வசதிகளில் முக்கியமாக சத்திரசிகிச்சை கூடம் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர் என்பன சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படவில்லை என்பது முக்கியமான குறைபாடாக உள்ளது.
எவ்வாறு இந்த இந்நிலை ஏற்பட்டது என்று ஆராய்ந்தால் 2009 வரை போர் நடக்கும் காலத்தில் வட பகுதி வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்தன என்பது வெளிப்படை.
அதன் பிறகு பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திக்குரிய அழுத்தங்களை பிரயோகிக்காததால் 2010-2018 வரை மந்த கதியில் அபிவிருத்தி இடம் பெற்றது.
இப்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டதால் அனைத்து அரசியல்வாதிகளும் வாக்குகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதாக சீன் போடுகிறார்கள்.
இவர்களில் சிலர் கடந்த காலத்தில் வைத்தியர்களிடம் கப்பம் கேட்டு அவர்களை நாட்டை விட்டு கலைத்தவர்கள் எனப்து பலருக்கு தெரியாமல் இருக்கலாம். 2019 கோவிட் அதை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து ஆகியவற்றால் இலங்கை பூராகவும் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தாமதப்பட்டு இருந்தது.
பின்னர் வந்த ரணில் அரசாங்கம் பொருளாதார நிலையில் இருந்து நாட்டை மீட்டதாக உரிமை கோரினாலும் அதிகரித்த வரிகளை விதித்து வைத்தியர்களையும் நிபுணர்களையும் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கில் வெளியேறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் ஒவ்வொரு நாளும் .குறைந்தது ஒரு மருத்துவ நிபுணரும் சராசரியாக 3 மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
குறிப்பாக பெருமளவு சத்திரசிகிச்சை நிபுணர்கள் வெளியேறியுள்ள நிலையில் பெரிய வைத்தியசாலைகளே சத்திரசிகிச்சை நிபுணர்கள் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலத்தில் சாவகச்சேரிக்கு சத்திரசிகிச்சை நிபுணர்களை நியமிப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது.
தென்மராட்சியை சேர்ந்த பல வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் வெளிநாட்டில் வசதியாக இருந்துகொண்டு நாங்கள் 5 பவுண் அனுப்பினோம் 10 டொலர் அனுப்பினோம் ஏன் இன்னமும் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யவில்லை என்று சமூக ஊடகங்களில் கேட்பதை விடுத்து உங்களுடைய ஊர் வைத்தியசாலையில் சிறிது காலம் வேலை செய்யலாம் அல்லவா ? காலி முதலான தென் பகுதியில் வசிக்கும் வைத்தியர்களை கட்டாயப்படுத்தி சாவகச்சேரியில் வேலை செய்ய வைத்தால் அவர்களும் மனிதப் பிறவிகளாக வீட்டுக்கு போக துடிப்பார்கள் மேலும் சாவகச்சேரியின் அபிவிருத்தியில் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது.
எனவே இந்த இந்நிலை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஏற்பட்டதற்கு தென்மராட்சியில் இருந்து வெளியேறிய மருத்துவர்களும் ஒரு காரணம் என்பதை அவர்கள் நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் குறிப்பாக இலங்கை பல்கலைக்கழகங்களில் இலவச மருத்துவ கல்வியை பயின்ற பின்னர் இப்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் தென்மராட்சியை சேர்ந்த மருத்துவர்களும் சத்திரசிகிச்சை நிபுணர்களும் சிறிது காலமாவது சாவகச்சேரியில் வேலை செய்ய முன்வரவேண்டும்.
அதே நேரம் சமூக ஊடகங்களில் சீன் போடுவோரால் எந்த மாற்றமும் சாவகச்சேரியில் நிகழப்போவதில்லை. இவர்கள் பொழுதுபோக்குக்காக கமெண்ட்ஸ் போடுவார்கள் மற்றப்படி தமது youtube வியாபாரத்தை பெருக்குவார்களே தவிர உருப்படியான எதையும் செய்யப்போவது இல்லை.
இதைவிட மருத்துவர்களை குறை சொல்வோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிக் கொண்டு வைத்தியர்கள் மாத்திரம் இலங்கையில் இருக்க வேண்டும் என்று குதர்க்கம் பேசுவார்கள்.
எனது பணிவான கோரிக்கை ஒவ்வொரு தென்மராட்சியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்யும் வைத்தியரும் 6 மாதம் ஆவது சாவகச்சேரியில் வந்து வேலை செய்தால் தற்போதைய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையை அதற்குரிய வசதிகளுடன் விரைவாக இயங்க வைக்க முடியும்.
இதை விடுத்து கடந்த காலத்தில் என்ன நடந்தது என்று மற்றவர்களை குற்றம் சாட்டி கொண்டிருப்பதால் எந்த பலனும் கிடைக்க போவதில்லை. இந்த தியாகத்தை செய்ய முன்வருவார்களா ?