யாழ் மாவட்டத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் வழங்க வேண்டும். அதே நேரத்தில் தற்போது அரசாங்கம் அரிசிக்குரிய கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது.
அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். எனவே சில்லறை விற்பனையாளர்ளும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் அவர் அதிக விலைக்கு அரிசியை விற்று பாவனையாளர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் யாழில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் ஊடாக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இதனூடாக கட்டுப்பாடு விலையினை மீறி அரிசி விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறினார்.
எனவே பொதுமக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்ப்பாண வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மேலும் தெரிவித்தார்.