யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற போது, அவர் ”தன்னை சிறைக்காவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி அழுதார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அதேவேளை அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம், நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.