பேருந்துகளுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக யாழ். தனியார் சிற்றூர்தி பேருந்து சேவை சாரதிகள் இன்று கோண்டாவிலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அங்கிருந்த சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இன்று அதிகாலையிலிருந்து இங்கு காத்திருக்கின்றோம். இதனால் நாங்கள் கடமையில் ஈடுபடமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால் பாதிக்கப்படுவது நாங்கள் மட்டுமல்ல. வேலைகளுக்குச் செல்பவர்கள், மாணவர்கள், நோயாளிகள் எனப் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எமது சேவையானது தடைப்பட்டதால் அவர்கள் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களது வாழ்வாதாரமும் எங்களது வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்தும் எமக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளே வழங்கப்படுகின்றது. எமக்கு வழமைபோல் எரிபொருளை வழங்கினால் நாங்கள் எமது சேவையை வழமைபோல் திறம்படச் செய்வோம்.
எனவே உரியவர்கள் எங்கள் அனைவரது நிலையையும் கருத்தில் கொண்டு இதற்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.