யாழ்.நெல்லியடியில் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
யாழ்.நெல்லியடியில் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட தரப்புக்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்திருக்கின்றார். புற்றுநோய் காரணமாக கர்ப்பபையை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சையினை யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அவருடைய உடலில் துணி ஒன்று வைத்து தைக்கப்பட்டதால் கிருமி தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையிலும், உயிரிழந்த பெண்ணின் உடலில் துணி வைத்து தைக்கப்பட்டதாலேயே கிருமி தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தனியார் வைத்தியசாலை பணிப்பாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி உளளிட்டோரை இன்று நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமெனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.