உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்துக்கு பல்வேறு உலக தரப்பினர்கள் பணம் வழங்கினார்கள் எனவும் அது தொடர்பில் தெளிவான அறிக்கையை அவர் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
”கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், பல்வேறு அமைப்புகள், மற்றும் இலங்கையின் உயர்மட்ட வர்த்தகர்கள் எனபலரும் கர்தினாலுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பணம் வழங்கியுள்ளனர்.
எனவே தாக்குதலின் பின்னர் அவருக்கு கிடைத்த பணம் தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
மேலும் தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் என் மீது 400 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.கூறப்போனால் அதிக வழக்குகள் கொண்டவர் என என்னை கின்னஸ் புத்தகத்தில் பெயரிடக்கூடும்.கர்தினால் தலைமையில் 400 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன . இறந்தவர்களுக்கு ஒரு வழக்கு, அங்கங்களை இழந்தவர்களுக்கு ஒரு வழக்கு என இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால் கர்தினாலுக்கு கிடைத்த பணம் தொடர்பில் அவர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அது மக்களுக்கு சென்றடையவேண்டிய பணம்.
எனினும் என்னுடைய சொந்த பணத்தையே இழப்பீடாக வழங்கினேன்.
ஆனால் கர்தினாலோ இதுவரையில் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.