முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக, முட்டை கைத்தொழில் துறை வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர் சங்கங்களுக்கும் இடையே இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த வருடம் 80,000 கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இவ்வருடம் கோழிகளின் எண்ணிக்கை 7,000ஆக குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
அத்துடன் இந்த வருடம் ஜூலை மாதம் வரை முட்டை உற்பத்தி 164 மில்லியனாகவும் கோழி இறைச்சி உற்பத்தி 18 மில்லியன் தொன்களாகவும் குறைந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலங்கு உணவுகளின் விலை அதிகரிப்பு மற்றும் இரசாயன உரங்கள் மீதான தடை காரணமாக சோள உற்பத்தி குறைவடைந்தமை என்பன விலங்குணவு தட்டுப்பாட்டுக்கு வழி அமைத்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கோழிப் பண்ணை மற்றும் முட்டை உற்பத்தித் தொழிலைப் பாதுகாப்பதற்கான கூட்டுத் திட்டத்தை கால்நடை பாதுகாப்பு திணைக்களம், நுகர்வோர் அதிகாரசபை மற்றும் தனது தலைமையின் கீழ் உருவாக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் அறிவித்துள்ளார்.