இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவது சம்பந்தமாக கவனம் செலுத்தப்படலாம் எனவும் இலங்கையின் கடன் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கும் எனவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சின் விஜயத்தின் போது சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம்
இந்திய அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்
எரிசக்தி பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, பணப்பரிமாற்றம் என்பன மட்டுமல்லாது இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இரண்டு நாள் விஜயத்தின் போது இலங்கை சம்பந்தமாக சில அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
கடந்த ஆண்டில் வழங்கிய உதவிகளை போல், இலங்கைக்கு தேவையான சாதகமான பதிலை இந்தியா வழங்கும் எனவும் கூறப்படுகிறது. அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி மற்றும் கடன் வசதிகள் உட்பட சுமார் நான்கு பில்லியன் டொலர் கூட்டு பொதி மற்றும் ஆசிய கண்காணிப்பு சங்கத்தின் ஊடாக கடன் செலுத்துதலுக்கான ஒத்திவைப்பை வழங்குதல் போன்றவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது எதிர்பார்க்கலாம் என பேசப்படுகிறது.
மின்சக்தி வலையமைப்புடன் இலங்கையை இணைக்கும் திட்டம்
இந்தியா மற்றும் இலங்கை தேசிய கொடிகள்
இதனை தவிர திருகோணமலை அபிவிருத்தித்திட்டம் மற்றும் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் போன்ற ஏனைய நாடுகளுடனான மின்சக்தி வலையமைப்புக்கான இந்தியாவின் திட்டத்தில் இலங்கை பிரவேசிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் கடல் வழியிலான மின் இணைப்பு தொடர்பான நீண்டகாலத்திற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளை குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கைக்கு இரண்டு விஜயத்தை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.