மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணைக்குழு அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான “நீதிக்கான எங்கள் குரல்” எனும் தலைப்பில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை வலியுறுத்திய திட்ட பயனாளிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகளுடனான கருத்தமர்வு மன்னார் விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று(26)காலை 10 மணியளவில் அளவில் மன்னார் தனியார் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் மாற்றுத்திறனாளிகள் ,சமூக மட்டத்தில் அனுபவிக்கும் பாரிய சவால்களையும் அவர்களின் தேவைகளையும் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் எடுத்துக் கூற, அவர்களுக்கு நேரடியாக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
குறிப்பாக நடைபெற்று முடிந்த யுத்தத்தினாலும் பல்வேறுபட்ட காரணங்களினாலும் மன்னார் மாவட்டத்தில் புள்ளி விபரப்படுத்தப்படாத 1436 நபர்களுக்கு மேல் மாற்றுதிறனாளிகளாக காணப்படுகின்றனர். இவர்கள் சமூக மட்டத்தில் அனைத்து விடயங்களிலும் ஓரங்கட்டப் பட்டவர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பேருந்து நிலையங்கள் , வங்கிகள் , தனியார் நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் அணுகும் வசதிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான மலசலகூட வசதிகள் , நிழல் அணுகும் வசதிகள் போதிய அளவு மேற்கொள்ளப்படவில்லை என அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
பல பொதுப் போக்குவரத்து சேவையின் போது மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச் செல்வதில் பல்வேறு பின்னடைவுகளை காட்டுவதாகவும், இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மருத்துவ தேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பல மைல்கள் தூரம் பயணித்து மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வர வேண்டி உள்ளதாகவும், எனவே பிரதேச வைத்தியசாலையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆணைக்குழு உருவாக்கப்பட்டு அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகள் மாவட்ட ரீதியாக அதிகரிக்கப்பட வேண்டும். மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்படுவது உண்மைத் தன்மையுடன் பரவலாக்கப்பட வேண்டும்.
ஒரு வீட்டில் மூன்று மாற்றுத்திறனாளிகள் காணப்படும் போது அங்கு ஒருவருக்கே மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இதனால் பல துன்பங்களை அனுபவித்து வருவதை நாம் காண்கிறோம்.
பெண் மாற்றுத் திறனாளிகளுக்காக புதிய கொள்கைகள் நடைமுறைகள் வரையப்பட வேண்டும்.அவை சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பெண் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தி மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். அவர்களது கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் .
மாற்றுத்திறனாளி நபர்கள் சமூகத்தில் சம உரிமைகளை அனுபவிக்க உரிமையுடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசின் கல்வி , தொழில் வாய்ப்பு , அரசியல் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டை அதிகரித்து ஊக்குவிப்பு வழங்குவதுடன் அவர்களுக்கு சலுகைகளையும் வழங்கப்பட வேண்டும் போன்ற மிக முக்கியமான கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டது.
குறித்த கோரிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை தான் மேற்கொள்வதாகவும் மாற்றுத்திறனாளிகளினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான பிரேரனை ஒன்றை நாடாளுமன்றத்தில் தான் விரைவில் முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் மாற்றுத்திறனாளிகள் போக்குவரத்தின் போதும் அதே நேரம் அரச அலுவலகங்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தாம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளர்,மன்னார் போக்குவரத்து சபையின் முகாமையாளர், மன்னார் மாவட்ட பெண்கள் சமாசம், அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியம், இளையோர் தன்னார்வக் குழு, தேனி மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.