மட்டக்களப்பு மேச்சல் தரைப் பண்ணையாளர்களின் 52 ஆவது நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை,கைது செய்து பொலிஸார் அராஜகம் செய்ததாகக் கூறி பிரதேச மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை(5) சந்திவெளி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதும் பிணையாளிகளின் வதிவிட உறுதிப்படுத்தல் தாமதமாகியதால் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் சினத்தை தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து நேற்று காலை(5) மயிலத்தமடு, மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
முறக்கொட்டாஞ்சேனை மாரியம்மன் ஆலய முன்றிலிலிருந்து பேரணியொன்றை ஆரம்பித்த மாணவர்கள் சித்தாண்டியில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் நடைபெறும் இடம்வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமது பஸ்ஸில் திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைதுசெய்தனர்.
இதன்போது சந்திவெளிப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகத் திரண்ட பெண்கள், தங்களுக்கு நீதி வழங்கமுடியாதவர்கள் தமக்கு ஆதரவாக வந்த மாணவர்களை கைதுசெய்து அநாகரிகமான செயற்பாட்டை செய்துள்ளதாக கூக்குரலிட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் ஆட்பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.