நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக வற் வரி அதிகரிக்கப்பட்டதனால் அரசாங்கத்திற்கு எதிர்பார்த்த வருமானம் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15 வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (2024.02.14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியில் மக்களுக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
பொருளாதார அபிவிருத்திக்கு வற் வரி அதிகரிக்கப்பட்டதுடன் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய வருமானங்களை முறையாகச் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்களைப் பெற்றுக்கொள்ள முறையான வேலைத்திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக தற்போது அரசாங்கம் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கப்பெற்று வருவதால், இறுதியாக அதிகரிக்கப்பட்ட வற்வரியை மீண்டும் நூற்றுக்கு 15வீதமாக குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி இருக்கிறது.
இன்னும் ஒரு சில மாதங்களில் வற்வரியை நூற்றுக்கு 15வீதம் வரை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கிறோம் என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.