கிளிநொச்சி நகரிற்கு மிக அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தனது மகன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகி தற்போது போதைப்பொருள் இன்றி அவனால் இருக்க முடியாதுள்ள நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப உதவி கோரிய குடும்பத்தினரின் அவல நிலை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த தாய் தெரிவிக்கையில்,
நிறைய எதிர்பார்ப்புகளுடன் வளர்த்தேன், பெரிய நாடு ஒன்றுக்கு அனுப்புவதற்கு கூட ஏற்பாடுகள் செய்திருக்கின்றேன். ஆனால் அவனின் நிலைமையோ மிக மோசமாக உள்ளது.
போதைப்பொருள் பாவிப்பதற்காக வீட்டில் உள்ள பொருட்களை கூட எடுத்துச் சென்று விற்றுவிடுகின்றான். நான் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியேறிவிட்டேன்.
என்னை பொறுத்தவரை எனது மகன் இருப்பதனை விட அவன் செத்துபோவதே மேல் என மனம் நொந்து சொல்கிறார் பெற்றத் தாய்.
போதைப்பொருள் பாவனையால் பெற்ற மகன் இருப்பதனை விட இறப்பது மேல் என நினைக்கும் அளவுக்கு அந்த தாய் விரக்தியுற்றுள்ளார்.
எனது தம்பியை பல வழிகளில் திருத்த முயற்சிகள் எடுத்தோம் ஒன்றும் சரிவரவில்லை. அவனால் குடும்பத்தில் நிம்மதி இல்லை என்கிறான் அண்ணன்.
தம்பியை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் உதவ முடியுமா, என கேட்டார். அவர். ( கந்தக்காட்டுக்கு அனுப்புவதற்குரிய வழிமுறைகளை காட்டியிருக்கிறேன்.) மகன் உயிரோடு இருந்தால் வாழ் நாள் கவலையும் வேதனையும் இருக்கும் அவன் செத்துவிட்டால் கொஞ்சநாள் கவலையும், வேதனையும்தான் என்கிறார் அந்த தாய்.
ஒரு தாய் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகனையே செத்துபோகட்டும் என கூறுமளவுக்கு போதைப்பொருள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளிநொச்சியின் சமூக, கலாச்சார பண்பாட்டு கட்டமைப்பு சிதைந்தும் அழிந்தும் செல்கிறது.
ஆனால் எங்களுடைய தலைவர்களோ பாராளுமன்றத்தில் முழங்குவதும், இராஜதந்திரிகளுக்கு இடித்துரைப்பதிலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.