அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் – 1”, கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம், வசூல் சாதனைகளையும் செய்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரகுமான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் ஐமேக்ஸ் 3டி வடிவத்தில் கண்டு களித்தார்.
முன்னதாக, இதற்காக ஒட்டுமொத்த இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரையிடல் முடிந்த பின், பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பொன்னியின் செல்வன் படம் கொடுத்த அனுபவம் குறித்தும், நாவல் குறித்தும் ஏராளமான சுவாரஸ்ய விஷயங்களை கமல் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவரிடம் ராஜராஜ சோழன் குறித்து கேள்வி கேட்டிருந்த நிலையில், இதற்கு கமல் அளித்த பதில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழா நிகழ்வில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
இதில் பேசிய வெற்றிமாறன்,
“இன்று நாம் கலையை சரியாக கையாள தவறினால் நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வள்ளுவருக்கு வந்து காவி உடை கொடுக்குறதாக இருக்கட்டும். ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவதாக இருக்கட்டும், இப்படி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
இது சினிமாவிலும் நடக்கும். இந்த அடையாளங்களை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம்தான் போராடணும். நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். இது போல எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்படணும்” என கூறி இருந்தார்.
ராஜராஜ சோழன் மதம் குறித்து வெற்றிமாறன் பேசிய கருத்து, சமூக வலைத்தளங்களில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணிய நிலையில், பலரும் பல விதமான கருத்துக்களையும் வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும், பொன்னியின் செல்வன் படம் பார்த்த பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பின் போது கமலிடமும் ராஜராஜ சோழன் மதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன்,
“இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம் , வைணவம், சமணம் இருந்தது. அது ஆங்கிலேயர்கள் நமக்கு வைத்த பெயர். என்ன சொல்வதென்று தெரியாமல் வைத்தார்கள்” என கூறி உள்ளார்.