பெற்ற குழந்தையை விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் மற்றும் தங்க நகை வாங்குவதற்காக ரூ.1.2 லட்சத்திற்கு விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் இந்தியா மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே அந்த இரண்டு மாத ஆண் குழந்தை மூன்று முறை கைமாற்றப்பட்டு, இறுதியில் ரூ.3.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர் உட்பட மொத்தம் 7 பேர் கைது
முகுந்த்வாடி பகுதியைச் சேர்ந்த வந்தனா மற்றும் யோகேஷ் தம்பதியினர் ஜூலை 5-ஆம் தேதி பிறந்த தங்கள் ஆண் குழந்தையை விற்க முடிவு செய்தனர்.
இடைத்தரகர்கள் மூலம் குழந்தையைக் கைமாற்றிய பெற்றோர், கிடைத்த பணத்தில் ரூ.25,000-க்கு ஸ்மார்ட்போனும், ரூ.62,000-க்கு தங்க நகையும் வாங்கியுள்ளனர். இதனிடையே, குழந்தை கடத்தல் கும்பல் குறித்து ரகசியத் தகவல் அறிந்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது.
இறுதியில் தெலங்கானாவில் இருந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டு, குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். குழந்தை தற்போது பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் மாபெரும் மாநிலங்களுக்கிடையேயான குழந்தை கடத்தல் கும்பல் இயங்குகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

