பல்லம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மதவாக்குளம் வெந்தக்கடுவ பிரதேச வனப்பகுதியின் பாறைப் பகுதியில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நல்வரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று குறித்த பிரததேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 26, 37, 67 ஆகிய வயதுகளை உடையவர்கள் எனவும் இவர்கள் மதவாக்குளம், தெஹிவளை, துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் குறித்த வனப்பகுதியின் பாறைப்பகுதியில் இரண்டு அடி விட்டமும், 12 அடி நீளமும் கொண்ட பாரிய குழியொன்றை தோண்டியுள்ளதாகவும், அந்த பாறைக் குழிக்குள் உள்ளே இறங்குவதற்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏணி ஒன்றையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நன்கு சந்தேக நபர்களையும் கைது செய்த குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், புதையல் தோண்டுவதற்காக சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக பல்லம பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு பல்லம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரையும் நேற்று ஆனமடுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.