களுத்துறை விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நபரொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
களுத்துறை பாலத்தின் கீழ் நேற்று (12) காலை முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுப்பதைக் கண்டதாக ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய சோதனையின் போது, முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படும் இடத்தில் ஒரு பயணப்பையில் இருந்து கதிர்காமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரின் அடையாள அட்டையின் புகைப்படம் மற்றும் இரண்டு வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மீட்கப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

