இலங்கையின் 77 ஆவது வரவு செலவுத் திட்டமான 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (14) சமர்ப்பிக்கப்பட்டது.
சுமார் 400 பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் வரவு செலவுத் திட்ட உரையை கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பிற்பகல் 1.30 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்துடன் சபைக்கு வருகை தந்ததுடன், நிதியமைச்சராகவும் ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த முதல் வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், “இலங்கை – ஒரு புதிய தொடக்கத்தை நோக்கி” என்று தலைப்பிடப்பட்டது.
அத்துடன், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (15) ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் மற்றும் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை சபை ஒத்திவைக்கப்படும் போது கேள்விகள் அல்லது ஆலோசனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னர் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறும்.
நவம்பர் 14 முதல் டிசம்பர் 8 வரையிலான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களைத் தவிர வாரத்தின் மற்ற அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.