கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த குழுவினருக்கு எதிராக அங்கு கல்வி கற்கும் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தகவல்களும் அவ் மாணவர்களினால் தெரியப்படுத்தாத நிலையிலே இவ் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலரது அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமாகவே இது காணப்படுகின்றது.
நடந்த இப் போராட்டத்திற்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதனை இங்கே உறுதியாகக் கூறிக்கொள்ளுகின்றோம்.
மேலும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்ட மாணவர்களினால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது மாணவர் ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அக்கோரிக்கையானது நியாயமானதாக இருந்தால் கண்டிப்பாக அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
இவ்வாறான தவறுகள் எதிர்வரும் காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் தீர்க்கமாக கூறிக்கொள்கின்றோம் என்றுள்ளது