பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மீதும், வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால், அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வைத்தியசாலைக்குள் வந்த நபர் ஒருவர், மேற்படி இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்ப்பதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார்.
அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அம்புலன்ஸ் சாரதி, வழிகாட்ட மறுத்துள்ளார். இதையடுத்தே, அம்புலன்ஸ் சாரதி மீது அந்த நபரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடயத்தை அறிந்து அவரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் சென்றபோது, அவர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்த நபர் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
பருத்தித்துறைப் பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி சந்தேகநபர் கத்தியொன்றை உடமையில் மறைத்து எடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.
இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் இளைஞர் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர் வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் நபர்களால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

