அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 30 வருட யுத்தத்தின்போது, யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி, அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என முஸ்லிம்களை குறிவைத்து இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை நினைத்து வேதனையடைகின்றேன்
பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல், பயங்கரவாதத்திற்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டதை விடவும், அரசியல் உள்நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மிகவும் காத்திரமாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை ஞாபகப்படுத்த விரும்புவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அவ்வாறான ஒருவர் தற்போது ஜனாதிபதியாக உள்ள நிலையில், அறவழிப் போராட்டக்காரர்களை அவரது கையொப்பத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எண்ணி தாம் வேதனையடைவதாக ரிஷாட் பதியுதீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.