இலங்கைக்கு இந்தியா வழங்க இருக்கின்ற பொருளாதார நிவாரண உதவிப்பொதிக்கு முன்னராக இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்துவதற்கு இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) டெல்லிக்கு செல்லவுள்ள நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் (V. Uruthirakumaran) கடிதம் ஒன்று டெல்லிக்கு சென்றுள்ளது.
இலங்கை கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மீட்டெடுக்கும் முகமாக அத்தியாவசியப் பொருட்களுக்கும் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யவும் உணவு இறக்குமதிக்காகவும் மற்றும் அந்நிய செலாவணி இருப்பினை கட்டியெழுப்பவும் 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கவுள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கான இந்தியாவின் நிவாரண நிதியுதவிகள் செயலாக்க உறுதிப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் 1.4ம் சரத்தில் குறிப்பிட்டவாறு இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம் என்பதனை உறுதியான செயலாக்க உத்தரவாதத்துடனேயே இலங்கைக்கான எந்தவொரு உதவிகளும் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மூன்று முக்கிய விடயங்களை உறுத்திப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைச் செயலாக்க வேண்டும்.
இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதியில் சிங்களர் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும்.
தமிழர் பகுதிகளுடன் சிங்களக் கிராமங்களை இணைத்து தமிழர் பகுதிகளின் எல்லை வரையறை செய்வதை நிறுத்த வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் இராணுவத்தின் யுத்த வெற்றிச் சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தின் பகுதிகள் என அடையாளப்படுத்தல், வனத்துறை திணைக்கள பகுதிகள் என தமிழர் பகுதிகளை இலங்கையின் அரச இயந்திரங்கள் வலுக்கட்டாயமாக அபகரித்து நிறுவி வருவதன் ஊடாக தமிழர்களை அவர்களது நிலத்திலேயே சிறுபான்மையினர் ஆக்குகின்ற நோக்கத்தைக் கொண்டதாக உள்ளதெனப் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர் பகுதிகளுடன் சிங்களக் கிராமங்களைச் சேர்த்து தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் தொகையை அதிகமாக்குவதற்காக எல்லைகளைப் பிரித்து இலங்கை அரச இயந்திரம் வரையீடு செய்வதாகவும் தனது கடிதத்தில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் பெருமளவில் இலங்கை இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருப்பது ஆக்கிரமிப்பாகவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கைத்தீவில் சீனத்தின் அடிச்சுவடுகள் பெருகி வருவதைப் பொறுத்த வரை இந்தியாவுக்கும் சீனத்துக்கும் இடையே இலங்கை அரசாங்கம் நடுநிலை காப்பது போல் பாசாங்கு செய்த போதிலும், சீனத்துடன் இலங்கைக்கான உறவு என்பது குறுநில அரசின் உறவே என்பதுதான் உண்மை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோடிட்டுக் காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகமான ஓர் தளமாகப் பயன்படுத்த முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.
தமிழர்கள் அழிக்கப்படுவது மனிதகுல இழப்பாக மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் பெருங்கேடாகவும் அது அமைவதோடு தமிழர்களின் நலனே இந்தியாவின் பாதுகாப்பு நலன் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.