கொழும்பு கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்துக்குள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான ஆணும் பெண்ணும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 4 ஆம் திகதி கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்துக்குள் போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது குறித்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி குற்றவாளி கூண்டில் இருந்தபோது அவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஹெரோயின் போதைப்பொருள்
கைதான இருவரும் கடவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொனஹென பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதுடைய பெண் மற்றும் 37 வயதுடைய ஆண் ஒருவர் எனவும் அவர்கள் இருவரும் தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 2 கிராம் 510 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைத்து விசாரித்த பின்னர், இருவரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.