தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளும் கல்விமாணி கற்கைநெறியின் பதுளை நிலைய (2017 – 2020) தொகுதி கற்கை நெறி ஆசிரியர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வும், ‘நினைவேட்டில் தாரகைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
பதுளையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு, கல்விமாணி கற்கைநெறியின் பேரவை தலைவர் எஸ். வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் விழாவிற்கு வருகைத்தந்த பதுளை கல்விமாணி கற்கைநெறி நிலைய இணைப்பாளர் எஸ்.ஜெயகாந்தன் (கல்வியியலாளர்) தலைமையிலான விரவுரையாளர்கள் அனைவரும் ஆசிரியர் மாணவர்களால் மங்கள திலகமிட்டு மலர்கொத்து வழங்கப்பட்டு இன்முகத்துடன் விழா நடைபெறும் மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.
இதனையடுத்து விழாவின் முதலாவது நிகழ்வாக இறைவணக்கமும், மங்கல விளக்கேற்றல் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்தும் ஏனைய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வின் ஒரு அங்கமாக கல்விமாணி கற்கைநெறி மாணவர் இதழாசிரியர் நடராஜா மலர்வேந்தன் தலைமையிலான மலர்குழுவினர் ” நினைவேட்டில் தாரகைகள் ” எனும் நூலை வெளியீடு செய்து இணைப்பாளர் எஸ். ஜெயகாந்தன் அவர்களிடம் கையளித்தனர்.
மலையகத்தின் ஊவா மாகாண மண்ணுக்கு பெருமைச்சேர்த்த கல்வித்துறையில் சாதனைப்படைத்து கல்வியியலாளராகவும், கல்விப்பணிப்பாளராகவும், ஆசிரியர் ஆலோசகராகவும், அதிபராகவும், தேசிய கல்வியியற்கல்லூரி விரிவுரையாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணி கற்கைநெறியின் தேசிய மற்றும் பிராந்திய இணைப்பாளர்களாகவும் திகழ்கின்ற விரிவுரையாளர்களைப்பற்றிய குறிப்பாகவும் இவர்கள் தடைகளைக் கடந்துவந்த பாதைச்சுவடுகளின் மீள்பார்வையாக “நினைவேட்டில் தாரகைகள்” நூலின் ஆக்கங்களாக வெளிவந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வையடுத்து கல்விமாணி கற்கைநெறி பதுளை நிலையத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயகாந்தன் அவர்களின் உரை நிகழ்ந்தது.
இதன்போது பதுளை கல்விமாணி கற்கைநெறி நிலையத்தில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பித்து வழிகாட்டிய விரிவுரையாளர்களினது செயலாற்றலையும் ஆசிரியர் மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.