நாளையில் இருந்து முகக்கவசங்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முகக்கவச உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் சேவைக் கட்டணங்களும் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக வறுமையில் வாழும் மக்கள் முதற்கொண்டு வசதி படைத்தவர்கள் வரையில் பாரியளவில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது முகக்கவசங்களின் விலையும் அதிகரிப்பது பொதுமக்களுக்கு மற்றொரு தலையிடியாக மாறியுள்ளது.
நாளாந்தம், எரிவாயு , டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் என பல்வேறு வரிசைகளில் பொதுமக்கள் காத்திருக்கும் அதேசமயம் வரிசையில் காத்திருந்ததால் உயிரிழப்புக்களும் இந்த இரு நாட்களில் பதிவாகியுள்ளன.
அத்துடன், அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் தமது அதிருப்திகளையும் மக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருவதுடன் அரச தலைவர்களுக்கு எதிராக வசை பாடி வருகின்றனர்.
அதேசமயம், இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் குறையாமல் பதிவாகின்ற நிலையில் முகக்கவசங்களின் விலையும் அதிகரித்ததால் பொதுமக்களால் வெளியில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.