நாட்டு மக்களை ராஜபக்ச அரசாங்கம் நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளதாக என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை, ஆனால் தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. அதோடு இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியதுடன், இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது என்றும், இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.