இலங்கைக்கு புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
அத்துடன், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகள், பங்களாதேஷ் சுகாதார அமைச்சின் ஊடாக நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நிலவும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கை அரசுக்கும் பங்களாதேஷ் அரசுக்கும் இடையில் மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.