தற்போது எமது தாய்நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது.
இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இலங்கையை 74 ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
இன்று எமது மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு திறமையற்ற நிர்வாகமே பிரதான காரணமாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், 69 இலட்சம் ஆணை பெற்று தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை, பதவியை விட்டு வெளியேறுவதற்கு மக்களின் பலம் தாக்கம் செலுத்தியுள்ளது.
மக்களின் கருத்துக்கு தலைவணங்கி இம்மாதம் 13ம் திகதி தனது பதவியை விட்டு வெளியேறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ (Gotabaya Rajapaksa) ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களின் பொறுப்பு மக்கள் நம்பாத போலி அறிவிப்புக்களை வழங்கக்கூடாது.
தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதுடன், மக்கள் நம்பும் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு தேவையான இடத்தை வழங்குவதும் எமது பொறுப்பாகும்.
அதற்கு தலைமை தாங்குவது பாராளுமன்றத்தில் உள்ள 225 மக்கள் பிரதிநிதிகளினதும் தவிர்க்க முடியாத கடமையும் பொறுப்புமாகும்.
இதன் காரணமாக மக்கள் கேட்கும் சர்வகட்சி இடைக்கால அரசுக்கு இடம்கொடுப்பதே இந்த தருணத்தில் எங்களின் கடமையாகும்.
எண்ணெய், எரிவாயு, என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க அனைத்து கட்சி இடைக்கால அரசுக்கு உறுதுணையாக இருக்கும்.
தற்போது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் எரிபொருள், உரம், மின்சாரம், அத்தியாவசிய உணவு, பிரச்சினைகளைத் தீர்த்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.