இஸ்லாமியர்கள் ஒரு மாத கால நோன்பை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை இன்று புதன்கிழமை (2024.04.10) உலகெங்கும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையிலும் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் ரமழான் தொழுகைகளில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள பல பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் இஸ்லாமியர்கள் தொழுகைகளை முன்னெடுத்தனர்.
வவுனியா
வவுனியா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் திடல் தொழுகை வேப்பன்குளம் குளக்கட்டு ஒழுங்கையில் அமைந்துள்ள திடலில் இன்று நடைபெற்றது.
தொழுகையை அஷ்ஷெய்க் அல் ஹாபிழ் E.L.றதீம் (மீஸானி) நடத்தினார்கள். இதன்போது பெருந்தொகையான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
முள்ளிப்பொத்தானை
முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை இன்று நடைபெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்மா பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இத்தொழுகையை உலமா சபையின் தம்பலகாமம் பிரதேச தலைவர் மௌலவி குசைன் மற்றும் மௌலவி முர்சித் ஆகியோர் வழிநடத்தினர்.
இதன்போது சகோதரத்துவம், ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து, முசாபகா செய்தனர்.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் என பலரும் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
காத்தான்குடி
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், காத்தான்குடி கடற்கரையோரத்தில் மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொண்டனர். அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.அன்ஸார் மதனீ பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடத்தினார்.
பெருநாள் குத்பாவை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.
கல்முனை
ஹுதா திடல் புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.ஜவ்ஸாத் (ஸலாமி) நிகழ்த்தினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தொழுகையில் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன், காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
மன்னார்
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை (10) காலை 7 மணிக்கு நடைபெற்றன.
இதன்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நடத்தப்பட்டது.
மன்னார் சயீட் சிட்டி பிரதம இமாம் எச்.என்.எம்.எம்.எஹியாகான் நோன்பு பெருநாள் தொழுகையையும் பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு, நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர், இஸ்லாமியர்கள் தமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு உணவுப் பண்டங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.