மட்டக்களப்பு
மகா சிவராத்திரி விரத நிகழ்வுகள் இன்று இலங்கையின் மிக உயரமான சுதை விக்கிரக ராஜ கோபுரத்தை உடைய மட்டக்களப்புதேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் காலை முதல் ஆரம்பமாகியது.
ஆலயத்திற்குச் சித்தர்களால் நர்மதா நதிக் கரையில் கண்டெடுக்கப்பட்ட உயிர் சிவலிங்கத்திற்கு அடியார்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு ஆரம்பமாகியது
ஆலயத்தின் புனித கங்கையான பாலாறு புஷ்கரணியில் தீர்த்த நீரை எடுத்து வந்து அபிஷேகம் பண்ணுதலுடன் ஆரம்பமாகிய இவ் அபிஷேக நிகழ்வானது இன்று காலை முதல் இன்று பின்இரவு வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது தங்களது ராசிகளுக்கு உரிய அபிஷேக திரவியங்களால் அடியார்கள் அபிஷேகம் செய்ததுடன் மேலும் இன்று லிங்கோற்பவ காலத்தில் ஏகாதச ருத்ர வேள்வியும் நடைபெற்று வருகின்றது.
இன்று இரவு முழுவதும் நான்கு ஜாம பூஜை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.விமலானந்தராஜா கூறியுள்ளார்.
ஹட்டன்
மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தில் இன்று (01) காலை ஆறுமணி முதல் பகல் 12 வரை பாலாபிஷேகம் நடைபெற்றது.
இந்த பாலாபிஷேகத்தினை தொடர்ந்து சிவராத்திரியினை முன்னிட்டு லிங்கேஸ்வர பெருமானுக்கு நான்கும் சாமமும் பால், தேன், நெய், எண்ணை, மற்றும் திரவிய அபிஷேகங்களும் அலங்கார பூஜைகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்த பூஜை வழிபாடுகளில் பொது மக்கள் சுகாதார பொறிமுறைகளை பின்பற்றி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மக்கள் ஆன்மீக சிந்தனையிலிருந்து விலகி பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டுவருவதனால் உலகில் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கலியுகத்தில் இன்றுள்ளவர்களின் தீய செயல்கள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே இன்று சுனாமி போன்ற பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நிம்மதியின்றி அங்குமிங்கும் அலைந்து திரிக்கின்றனர்.
இன்றுள்ள இளைஞர்கள் சுகபோகங்களுக்கும், அற்பசொற்ப வாழ்க்கை முறைக்கும் அடிபணிந்து செயல்படுவதனால் இன்று அநாவசியமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஆபத்து எம்மை தேடிவருவதற்கும் இதுதான் காரணமாக இருந்துள்ளன. எனவே இந்த கலியுகத்தினை கடப்பதற்கு இறை பக்தி இன்றியமையாதது. ஆகவே இன்று சிவராத்திரி தினத்தில் நான்கு சாம பூஜைகளிலும் கலந்து கொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெற வேண்டும் என ஹட்டன் ரொத்தஸ் லிங்க நகர் ஸ்ரீ ராஜராஜேஸ்வர ஆலயத்தின் பிரமகுரு கணபதி யோகி தெரிவித்துள்ளார்.