நாசாவின் செவ்வாய் கிரக பயணத்தில் பங்கேற்று வழிநடத்திய பெருமை இந்திய வம்சாவளி விஞ்ஞானியான சுவேதா மோகனுக்கு கிடைத்துள்ளது.சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் இன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பெர்சவரன்ஸ் விண்கலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தை சுற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்து வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த திட்டத்தில் பங்கேற்று வழிநடத்திய இந்தியா வம்சாவளி பெண் விஞ்ஞானியான சுவேதா மோகன் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தில் முதலில் இருந்தே சுவேதா மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.
ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவேதா மோகன் சிறு வயதிலேயே அமெரிக்கா சென்றுள்ளார்.
விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார். மேலும், நாசாவின் சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.