ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நிதி அகர்வால், ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர்.2017-ல் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன்பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.இப்போது, மூன்று தமிழ்ப் படங்களின் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் நுழைந்தவுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், அடுத்ததாக சிம்புவின் ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இரு படங்களும் சமீபத்தில் வெளியாகின. மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் அளித்த தாக்கத்தினால் நடிப்பின் மீது ஆசை கொண்டு திரையுலகினுள் நுழைந்துள்ள நிதி அகர்வால், கோலிவுட் தனக்கு அளித்த அட்டகாசமான வரவேற்பினால் தற்போது முறையாக தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்.இரு படங்கள் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் நிதி அகர்வாலுக்குத் தீவிர ரசிகர்கள் கிடைத்துள்ளார்கள்.
சென்னையில் உள்ள காட்டுப்பாக்கத்தில், நிதி அகர்வாலின் ரசிகர்கள் அவருக்கு சிலை அமைத்து, காதலர் தினமான நேற்று பாலாபிஷேகம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளார்கள். இதன் படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.இதுபற்றி நடிகை நிதி அகர்வால் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. காதலர் தினத்தன்று எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த பரிசு இது. அவர்களுடைய இந்தச் செயல் மேலும் நல்ல படங்களைத் தரவேண்டும் என என்னை ஊக்கப்படுத்துகிறது என்றார்.