காத்தான்குடியில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட்ட பெண் ஒருவர் உட்பட 4 பேரைக் கைது செய்ததுடன், 8 இலட்சம் ரூபா பெறுமதியான 23 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த முதலாம் திகதி காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி நிலையம் பூட்டியிருந்த நிலையில், உடைத்து அங்கிருந்த சுமார் 24 இலட்சம் ரூபா பெறுமதியான 75 கையடக்க தொலைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் சாஜன் கருணாரத்தின, ஜெசிங்க, அருண் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்கறைப்பற்றை சேர்ந்த ஒருவரை 12 கையடக்க தொலைபேசிகளுடனும், இறக்காமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 3 பேரை 11 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்துள்ளனர்.
இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்