தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம் அருகேயுள்ள புளியமரத்து அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூரன் மகன் சண்முகராஜ்.(43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் இன்று காலை திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பின்னர் சண்முகராஜ் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஏசைய்யா மகன் இம்மானுவேல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இம்மானுவேல் அருகே இருந்த பீர்பாட்டிலை உடைத்து சண்முகராஜாவை குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சண்முக ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புதியம்புத்தூர் போலீசார், கொலையாளி இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஊரக டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளின் திருமணம் முடிந்த அதே நாளில் தந்தை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டபிடாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.