திருகோணமலையில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை -உட்துறைமுக வீதியில் நேற்றிரவு (25) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் திருகோணமலை பாடசாலையில் கல்வி பயின்று வரும் 09 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு வேனொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய தாயாருக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட போது அத் தாயாருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனக்குடா பகுதியில் இருந்து வேனில் தாயாரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு செல்லும் வேளையில் எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் இதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை வழங்கப்பட்ட மாத்திரை ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றி வந்த அத் தாயாரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய ஐந்து வயது சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை திருகோணமலை-துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.