தாமரை கோபுரம், ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் சில தினங்களில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளை கருத்திற் கொண்டு கொழும்பில் போக்குவரத்துத் திட்டத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், தாமரை கோபுரத்தை ஒட்டி, டிசம்பர் 19ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வாகனங்களில் வரும் நபர்கள் கொழும்பில் நிறுத்துவதற்கு போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்கும்.
இதன்படி, லேக் ஹவுஸுக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்திலும் (பார்க்கிங் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்), கெப்டன் கார்டன் கோவில் வாகன நிறுத்துமிடத்திலும், டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலும், காமினி சுற்றுவட்டத்திலிருந்து ரீகல் சினிமா வரையிலான சாலையிலும் வாகனங்களை நிறுத்தலாம்.
இதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை அண்மித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் நபர்கள் MOD வாகன தரிப்பிடம், காலிமுகத்திடலின் நடுப்பகுதி மற்றும் நியூ பாலதக்ஷ மாவத்தை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த முடியும். மேலும் இக்காலப்பகுதியில் வீதிகள் மூடப்படாது என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.