தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய வரலாற்றுப் பாரம்பரியங்களும் தொல்லியல் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய காலச் சூழலின் அவசியம் கருதி யாழ் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கற்கைநெறியை தொடர்ந்தும் கற்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் நிகரற்றவாறு இவ்வாறான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டமையை சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக சாவகச்சேரி நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, வரலாற்றுச் சின்னமான இந்து ஆலயம் தொடர்பான விவகாரத்தில் தலையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொல்லியல் மரபுரிமை நிலையம் ஒன்று சாவகச்சேரி பிரதேசத்தில் அமைவதற்கு காரணகர்த்தாவாக இருந்தமையினையும் சுட்டிக்காட்டினார்.