வவுனியா, செட்டிக்குளம், வீரபுரம் மணிவாசகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிவருகையில்,
இன்று பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த போது காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற குறித்த பாடசாலை மாணவன் ஒருவரின் தந்தை உள்ளிட்ட மூவர், பாடசாலை வளாகத்தில் நின்ற ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆங்கில பாட ஆசிரியரான எஸ்.சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீதே இவ்வாறு கட்டையினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்கட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதட்டமான நிலமை நிலவி வந்ததுடன் பொலிஸார் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எனினும் ஆசியர் மீதான தாக்குதலுக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.