தமிழகத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் சுனையங்காட்டை சேர்ந்தவர் சேகர் (39). கூலி தொழிலாளியான இவருக்கும், கும்மளாங்குண்டு மாங்கோட்டை கிராமத்தை சேர்ந்த அமிர்தவல்லி (20) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் வேலைக்கு செல்வதில்லையாம். நேற்று முன்தினம் இரவு சேகர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, அமிர்தவல்லி, வேலைக்கு செல்லாமல் ஏன் தினமும் குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து அமிர்தவல்லி மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் தீ அவரது உடல் முழுவதும் பரவியதை தொடர்ந்து வேதனையால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.