அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன்படி, ஆட்பதிவுத் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, தரவு பாதுகாப்பு அதிகாரசபை, GovTec நிறுவனம், இலங்கை டெலிகொம் – மொபிடெல் நிறுவனம், கொழும்பு தாமரைக் கோபுரம் நிர்வாக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.
இந்த ஆண்டின் இறுதியில் டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவது தொடர்பான செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பொதுமக்கள் அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளையும் மிகவும் செயற்திறனாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GovPay வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து வாகன தண்டப் பணங்களையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் செலுத்துவதற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் வசதிக்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய டிஜிட்டல் சூப்பர் செயலி (National Super App) திட்டம், இலங்கைக்குள் பணப் பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பிரபலப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “National QR Drive” திட்டம், அரச நிறுவனங்களுக்கு இடையே பாதுகாப்பாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் சேவை வழங்கல் செயல்முறைகளை முறைப்படுத்தவும் உதவும் தேசிய தரவுப் பரிமாற்றம் (National Data Exchange – NDX), நாட்டில் தொலைபேசி எண்களை மாற்றாமல் வேறு வலையமைப்பிற்கு மாற அனுமதிக்கும் Number Portability திட்டம், அரச டிஜிட்டல் கொள்முதல் மற்றும் சேவை தளம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் கீழ் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கி பொதுச் சேவை வழங்கலைத் திறம்படச் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள PIC-Net (Public Impact Champions Network) திட்டத்தின் முன்னேற்றம், Data Transmission Unit (DTU) எனப்படும் தரவு பரிமாற்றப் பிரிவு, AI தரவு மையம், அரச மற்றும் பொதுச் சேவைத் துறைக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட GovTech Academy பயிற்சி மற்றும் கல்வித் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.
Govtec நிறுவனத்தைத் தொடங்குதல், தொழில்நுட்ப உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் ஊழியர்களைப் பணியமர்த்துதல் ஆகிய பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

