ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் தத்துவங்களுக்கு அமைய ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவரும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் கடந்த 28ஆம் திகதி நள்ளிரவு விடுக்கப்பட்டிருந்ததுதுடன் புதிய கூட்டத்தொடர் 2022,ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்று காலை 10.30மணிக்கு ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க இருக்கின்றார். அத்துடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மிகவும் வைபவரீதியாக இடம்பெறுகின்ற போதும், நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு சாதாரண நிகழ்வாக முன்னெடுக்கபப்டவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.
காலை நாடாளுமன்றம் வரும் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் வரவேற்பார்கள். பின்னர் ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றிவைப்பார். தொடர்ந்து சபை நடவடிக்கை ஆரம்பிக்கும் முகமாக காலை 10.25மணிக்கு கோரம் மணி 5நிமிடத்துக்கு ஒலிக்கவிடப்படும். இதன்போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சபைக்குள் வரவேண்டும்.
நாடாளுமன்ற சபை மண்டபத்துக்கு பவனியாக அழைத்துவரப்படும் ஜனாதிபதி, காலை 10.30மணிக்கு சபைக்குள் பிரவேசிப்பார். தொடர்ந்து ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்குவார்.
இதன்போது செயலாளர் நாயகம் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவுறுத்தப்பட்டமை மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுதல் பற்றிய பிரகடனத்தை சபைக்கு வாசிப்பார். அதன் பின்னர் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்துவார் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.