இதுவரையான தனது ஆட்சிக்காலத்தில் 5 சதத்தை கூட கடனாக பெறவில்லை என ஜனாதிபதி கூறுவது பொய் எனவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் சுமார் 5 ஆயிரம் மில்லியன் டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
5 சதத்தை கூட கடனாக பெறவில்லை என ஜனாதிபதி கூறுகிறார். ஜனாதிபதிக்கு தவறியுள்ளது என நான் நினைக்கின்றேன். ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் மில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் இருந்து கடனாக பெறப்பட்டுள்ளது.
அதேபோல் சர்வதேச நிறுவனங்களிடமும் கடன் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப் பகுதியில் கடந்த மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடனில் 77 வீதமான கடனே குறிப்பாக 2021 ஆம் ஆண்டு திரும்ப செலுத்தப்பட்டது.
இந்த கடனை செலுத்துவதற்காக நாட்டு மக்கள் மிகப் பெரிய இழப்பீட்டை செலுத்தினர். கடனை பெற்றால், வேறு நபர்கள் நாட்டை அடகு வைத்துள்ளதாக கூறுவார்கள்.
எனினும் ஜனாதிபதி நாட்டின் உணவு பாதுகாப்பை அடகு வைத்தார். மக்கள் தற்போது பட்டினியில் இருக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பசளை, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யாது, அந்த பணத்தில் கடனை திரும்ப செலுத்தியதால், நாட்டில் தற்போது பெரும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடனை செலுத்த பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக எரிபொருள், எரிவாயு, மின்சார துண்டிப்பு என்பன ஏற்பட்டுள்ளன. எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்ய பணம் இல்லை என்பதே இதற்கு காரணம்.
நாட்டின் உணவு பாதுகாப்பு, மருந்து பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஆகிய மூன்றையும் அடகு வைத்தே கடந்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தினர்.
இதனை தவிர கடந்த இறுதிக்காலத்தில் 5 ஆயிரம் மில்லியன் டொலர்களை மத்திய வங்கியின் ஆளுநர் கடனாக பெற்றுளளார். 2020-21 ஆம் ஆண்டுகளில் இந்த கடன் பெறப்பட்டுள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.