நாட்டில் பொருளாதாரம் மட்டுமல்ல 69 இலட்ச மக்களின் ஆதரவும் சமூக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சுதந்திர மக்கள் காங்கிரஸின் கண்டி கிளையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
69 இலட்ச மக்களின் ஆதரவு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதற்கு இடமளிக்க கூடாது. சுதந்திர மக்கள் காங்கிரஸ் என்ற ரீதியில் நாங்கள் அதனை எதிர்த்து செயற்பட தீர்மானித்துள்ளோம்.
இலங்கை வரலாற்றில் 74 வருடங்களில் 64 வருடங்கள் 4 குடும்பங்கள் மாத்திரமே இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளன.
அந்த குடும்பங்களில் திறமையான அரசியல் பயணம் இருக்கவில்லை. அத்துடன் ஒழுக்கமான நாடு ஒன்றை உருவாக்குவதற்கே இந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்தார்கள்.
ஊழல் மோசடியற்ற, உறவுகளை பார்க்காமல் திறமைகளுக்கு இடமளிக்கும் சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மக்கள் கோரினார்கள். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து முறைமை மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தார்கள்.
இன்று வரையில் அரசியல்வாதிகளுக்கான ஒரு பழக்கம் இருந்தது. வருவார்கள் பேசிவிட்டு செல்வார்கள். நம்முடைய அரசியல் முறைமையில் கலந்துரையாடல்களுக்கான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.
ஆனால் எங்களுடைய முறைமை வித்தியாசமானது. ஆகவே உங்களது கருத்துக்களை முன்வைப்பதற்கு காலத்தை வீணடிக்காமல் பயன்படுத்துமாறு கோரிக்கை முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.