கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள ஐந்து சி.டி. ஸ்கேனிங் இயந்திரங்களில் ஒரு இயந்திரம் மாத்திரமே தற்போது இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பிரிவு
இதன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, வலிப்பு நோய் பிரிவு உள்ளிட்ட வார்ட்டுகளில் இருந்து சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்கு அனுப்பப்படும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, சி.டி. ஸ்கேனர் பிரதான எக்ஸ்ரே அறையில் மட்டுமே இயங்குகிறது.
இதன்காரணமாக பரிசோதிக்க வேண்டிய அனைத்து நோயாளிகளையும் பிரதான எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
அத்துடன், வீட்டுக்குச் செல்லும் நோயாளிகளுக்கு சி.டி. பரிசோதனைகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுவதனால் வைத்தியசாலை வார்ட்டுகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளது.
இதனால், புதிய நோயாளர்களை வார்ட்டுகளில் சேர்க்க முடியாத நெருக்கடி நிலை காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.