கருத்தரித்தவர்கள் கருகலைப்பு மேற்கொள்வதற்கான கால அளவை அரசு நீட்டித்துள்ளது. அரசு வெளியிட்ட புதிய விதிகளின்படி, கருத்தரித்து 20 முதல் 24 வாரங்களுக்கு வரையில் குறிப்பிட்ட பெண்கள் கருகலைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு திருத்த சட்டம் மசோதா 2021-இன் படி, பாலியல் வன்புணர்வுக்குள்ளானவர்கள், தகாத உறவால் கருத்தரித்தவர்கள் (எடுத்துக்காட்டு: அண்ணன், தங்கை ஆகியோரிடையேயான உறவு), சிறார்கள், கருத்தரிப்புக்கு பின்னர் விவாகரத்தானவர்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, மன நல பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளியாகவோ மன நல பாதிக்கப்பட்டவராகவோ குழந்தை பிறக்கவிருப்பது கண்டறியப்பட்டாலும் அப்பெண் கருகலைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல், மனித நேய அடிப்படையிலும் அரசு அறிவிக்கும் அவசர காலம் அல்லது பேரிடர் காலங்களில் பெண்கள் கருக்கலைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளை உள்ளடக்கிய கருக்கலைப்பு திருத்த சட்ட மசோதா 2021, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, கருத்தரித்து 12 வாரங்களுக்கு பின்னர், கருகலைப்பு மேற்கொள்ளும் பட்சத்தில் ஒரு மருத்துவரின் பரிந்துரையும் 12 முதல் 20 வாரங்களுக்கு இடையே உள்ள காலக்கட்டத்தில் கருகலைப்பு மேற்கொள்ளும் பட்சத்தில் இரண்டு மருத்துவர்களின் பரிந்துரையும் தேவைப்படுகிறது.
புதிய விதிகளின்படி, மாநில அளவில் மருத்துவ குழு அமைக்கப்படவுள்ளது. மாற்றுத் திறனாளியாகவோ அல்லது மன நல பாதிக்கப்பட்டவராகவோ குழந்தை பிறக்கவிருப்பது கண்டறியப்படும் பட்சத்தில், 24 வாரங்களுக்கு பிறகு கருகலைப்பு மேற்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்பதை இக்குழுதான் முடிவு செய்யும்.
புதிய விதிகளின் கீழ் வரும் பெண்கள், இந்த மருத்துவ குழுவை அணுகலாம். அணுகிய மூன்றே நாள்களில், அப்பெண்ணையும் அவரின் மருத்துவ அறிக்கையையும் ஆராய்ந்து கருகலைப்பு மேற்கொள்ளும் கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா என்பதை குழு தெரிவிக்க வேண்டும்.