ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,(Sarath Fonseka) அந்ந கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அடிக்கடி “என்றும் எனது அன்புக்குரிய தந்தை” எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை நினைவுகூருவதுண்டு.
ஐக்கிய மக்கள் சக்தி மாற்று சக்தியாக மாற வேண்டுமாயின் சஜித் பிரேமதாச தனது தந்தையின் பெயரை மீண்டும் நினைவுப்படுத்தக் கூடாது என சரத் பொன்சேகா ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதுளையில் வைத்து சஜித் பிரேமதாசவிடம் அவர், இதனை நேரிடையாக கூறியதாக தெரியவருகிறது. அந்த பழைய பெயர்களால் தற்போது பயனில்லை என தான் சஜித் பிரேமதாசவுக்கு நினைவூட்டியதாக பொன்சேகா கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி புதிய பயணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமாயின் பழைய விடயங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது பொன்சேகாவின் நிலைப்பாடாக உள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட கீழ் மட்டத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போது ரணசிங்க பிரேமதாச (Ranasinghe Premadasa) மீது மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்த விடயம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
90 ஆம் ஆண்டுகளின் பின்னர் பிறந்தவர்களுக்கே ரணசிங்க பிரேமதாசவை பற்றி ஓரளவுக்கு குறைவான புரிதல் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.