கொழும்பு, பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
தனக்கு பெருந்தொகை கடன் தர வேண்டிய நபரொருவரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று பிற்பகல் குறித்த வர்த்தகர் புறப்பட்டுள்ளார்.
குறித்த நபரை சந்திபதற்கக வெளியே செல்கின்றேன் என மனைவியிடம் தெரிவித்துவிட்டே அவர் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை
நீண்ட நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும், தொலைபேசி இயங்காமல் இருந்துள்ளது.
எனினும், கணவர் பொரளை மயானத்தில் இருப்பது தொடர்பில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு GPS தொழில்நுட்ப சமிக்ஞைகள் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட தினேஷ் ஷாப்டரின் மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரை பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கமைய குறித்த அதிகாரி , சம்பவ இடத்துக்கு சென்று பார்க்கையில் , தினேஷ் ஷாப்டர் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து மயானத்தில் இருந்த ஒருவரின் உதவியுடன் அவரை மீட்டு, கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பலகோணங்களில் சிஐடியினர் விசாரணை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட தினேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டரின் மகன் ஆவார்.
இந்நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிஐடியினர், பலகோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை வர்த்தகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய நபரொருவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை வளையத்தினுள் முக்கிய நபர்
குறித்த சந்தேகநபருக்கும், தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாக த்கவல் வெளியாகியுள்ளது.
அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் சந்தேகநபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் ஆங்கில வர்ணனையாளர் பிரியன் தொமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.